
ஷங்ஹாய், செப்டம்பர்-21,
சீனாவின் வர்த்தக நகரான ஷங்ஹாயில் ஒரு மூதாட்டியால் விமானம் 5 மணி நேர தாமதத்திற்கு உள்ளானது.
Shanghai Pudong அனைத்துலக விமான நிலையத்தில் நிகழ்ந்த விசித்திரமான சம்பவத்தில், அம்மூதாட்டி நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விமானத்தின் ஜெட் இயந்திரத்தினுள் நாணயங்களை விட்டெறிந்ததே அதற்குக் காரணம்.
அவரின் இந்த மூடநம்பிக்கை செயல் கடுமையான பாதுகாப்பு சோதனைக்கு நிர்பந்தித்தது.
ஏனெனில்…ஒரு நாணயம் கூட ஜெட் இயந்திரத்தில் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும்.
தரைப் பணியாளர்கள் வேறு வழியின்றி விமானத்தின் இயந்திரப் பகுதிகளை அகற்றி நாணயங்களை மீட்டனர்.
இதனால் தேவையில்லாமல் அனைத்து பயணிகளுக்கும் பெரிய தாமதம் ஏற்பட்டது.
மூதாட்டி இதை பாரம்பரிய நம்பிக்கையின் பேரில் செய்ததாகக் கூறினாலும், அதிகாரிகள் இது பெரும் பாதுகாப்பு ஆபத்து என்றும், அனைத்துலக விமான விதிமுறைகளை மீறுவதாகவும் தெரிவித்தனர்.
மூதாட்டிக்கு எதிராக வழக்குத் தொடுப்பது போன்ற மேல் நடவடிக்கை எதனையும் விமான நிறுவனம் எடுக்கவில்லை.
என்றாலும், பயணிகள் மத்தியில் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டுமென அது வலியுறுத்தியது.