Latestமலேசியா

வெளிநாட்டுப் பயணத்திற்குத் தடை: 4 லட்சத்துக்கும் அதிகமான மலேசியர்கள் பாதிப்பு

ஜோகூர் பாரு, நவம்பர் 23 – வருமான வரி நிலுவை, நீதிமன்ற உத்தரவு மற்றும் அமலாக்க அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 404,848 மலேசியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோக் சக்காரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு முதல் இதுவரை இத்தகைய பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN, சுங்கத் துறை, ஊழியர் சேமநிதி வாரியமான EPF, திவால் துறை மற்றும் PTPTN ஆகியவற்றுடன் தொடர்புடைய நிலுவைகள் மற்றும் கட்டுப்பாடுகளும் இதில் அடங்கும்.

குடிநுழைவுத் துறை சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் மற்றும் அமலாக்க அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதாக அவர் விளக்கினார்.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படும் பயணிகள் அங்கேயே நிலுவைத் தொகையைச் செலுத்துவதன் மூலம் தடையை உடனடியாக நீக்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். சம்பந்தப்பட்ட அமைப்பை நேரடியாகத் தொடர்புகொண்டு நிலுவைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அந்த அமைப்பு தடை நீக்கத்திற்கான உறுதிப்படுத்தலை வழங்கிய பின்னரே குடிநுழைவுத் துறை பயண நிலையைப் புதுப்பிக்கும் என்றார்.

எனவே, வெளிநாடு செல்வதற்கு முன்பு இணையதளத்தில் தங்களது பயணக் கட்டுப்பாட்டு நிலையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு மலேசியர்களை அவர் அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!