
பஹாங், கேமரன் மலை, தானா ராத்தா காட்டு நடைபாதை 10-ல் நடைப்பயணம் மேற்கொண்ட ஜெர்மன் நாட்டுச் சுற்றுப் பயணி ஒருவர் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று நண்பகல் 12 மணியளவில் பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குக் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, 16 பேரடங்கிய மீட்புக் குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர்.
மலையடிவாரத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில், பழைய நீர்வழிப்பாதை எனக் கருதப்படும் குழியில் விழுந்த 58 வயது பாதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிச் செய்யப்பட்டது.
சம்பவத்தின் போது அவருடன் நடைப்பயணம் மேற்கொண்ட 57 வயது பெண் துணைவர் காயங்களின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காகப் பலியானவரின் உடல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



