
கோலாலம்பூர், மார்ச்-3-பினாங்கு இந்து அறப்பணி வாரியம், 2024 டிசம்பர் 31-ஆம் தேதியோடு முடிவடைந்த நிதியாண்டுக்கான தேசியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில், எந்தத் திருத்தங்களும் இன்றி ‘Clean Certificate’ சான்றிதழ் பெற்றுள்ளது.
இந்த சான்றிதழ், ஆகஸ்ட் 2023 முதல் நியமிக்கப்பட்ட வாரிய ஆணையர்களின் திறன், பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மைமிக்க நிர்வாகத்திற்கான அங்கீகாரமாகும் என, அதன் தலைவர் RSN ராயர் பெருமிதம் தெரிவித்தார்.
ஜெலுத்தோங் எம்.பியுமான ராயர், துணைத் தலைவரும் செனட்டருமான Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலத்துடன் நாடாளுமன்றத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவ்வாறு கூறினார்.
2024-ஆம் ஆண்டில் வாரியம் சுமார் 7.5 மில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்டியுள்ளது.
ஆனால் செலவினம் 8.7 மில்லியன் ரிங்கிட்டாக இருந்ததால், 1.18 மில்லியன் ரிங்கிட் பற்றாக்குறை பதிவாகியுள்ளது.
என்றாலும், 2024 டிசம்பர் 31 நிலவரப்படி வாரியத்தின் மொத்த சொத்துகள் 80.2 மில்லியன் ரிங்கிட்டாகவும், நிகர சொத்துகள் 78.9 மில்லியன் ரிங்கிட்டாகவும் உள்ளதாக ராயர் கூறினார்.
பண இருப்பும் 4.45 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சமூக சொத்துகளை பாதுகாப்பாக நிர்வகித்து, சிறந்த முறைகளை வலுப்படுத்தும் பணியில் வாரியம் தொடர்ந்து உறுதியாகச் செயல்படும் ராயர் தெரிவித்தார்.



