Latestமலேசியா

மரணச் சம்பவத்தை ஏற்படுத்திய விபத்து; ராணுவ அதிகாரிக்கு மேலும் 2 நாள் தடுப்பு காவல்

கோலாலம்பூர், ஏப்-29-Maju விரைவுச் சாலையில் கடந்த வாரம் மதுபோதையில் வாகனம் ஓட்டி, உயிரிழப்பு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இராணுவ அதிகாரி ஒருவர் மேலும் இரண்டு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான முதல் தடுப்புக் காவல் உத்தரவு நேற்று முடிவடைந்த நிலையில், அவரை விசாரணைக்காக நாளை வரை மேலும் தடுத்துவைக்கும் உத்தரவை போலீசார் பெற்றனர்.

விசாரணை அறிக்கை முழுமையடைந்தவுடன் அந்த அறிக்கை நாளை காலை அரசு வழக்கறிஞர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் சம்சுரி ஈசா ( Zamsuri Isa) தெரிவித்தார்.

இதுவரை, இந்தச் சம்பவம் குறித்து 12 சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், 31 வயதான ராணுவ அதிகாரி ஒருவர் ஏப்ரல் 23ஆம் தேதியன்று நெடுஞ்சாலையின் எதிர் திசைப் பாதையில் காரை ஓட்டிச் சென்றபோது, ​​41 வயதான இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஓட்டி வந்த மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதியது தெரியவந்துள்ளது.

விடுமுறைக்காக மலேசியா வந்த வங்காளதேச இளம் தம்பதியினர் அந்த காரில் பயணம் செய்தனர்.

அந்த விபத்தில் கேமிங் உள்ளடக்க உருவாக்குநர் என நம்பப்படும் கணவர், உயிரிழந்த வேளையில் அவரது மனைவி காயம் அடைந்ததால் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராணுவ அதிகாரியின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் இல்லை என தெரியவந்த போதிலும் , சுவாச பரிசோதனையில் அவரது இரத்தத்தில் மதுபானத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறியிருந்தது கண்டறியப்பட்டது.

இந்த விவகாரம் தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!