Latestஉலகம்

உலகின் முதல் விலை விவேக கைப்பேசி தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை சம்சோங்கிடம் பறிகொடுத்தது ஆப்பிள்

குபெர்டினோ, ஏப்ரல் 15 – 2024 -ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஆப்பிள் ஸ்மார்ட்போன் அல்லது விவேக கைப்பேசி ஏற்றுமதி, சுமார் 10 விழுக்காடு குறைந்துள்ளது.

அதற்கு, உலகளவில் முதலிடத்தை இலக்காகக் கொண்டு செயல்படும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் தீவிரமான போட்டியே காரணம் என IDC – ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் வரையில், உலகளவில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 7.8 விழுக்காடு அதிகரித்து, 28 கோடியே 94 லட்சம் யூனிட்டுகளாக பதிவானது.

அதில் 20.8 விழுக்காட்டு விற்பனையை ஆக்கிரமித்ததன் வாயிலாக, உலகின் முதல் விலை விவேக கைப்பேசி தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை, ஆப்பிளிடமிருந்து எளிதாக தட்டி பறித்துள்ளது சம்சுங்.

கடந்தாண்டு டிசம்பரில் வலுவான செயல்திறனுக்குப் பிறகு, ஐபோன் தயாரிப்பாளரின் செங்குத்தான விற்பனை சரிவு, உலகின் நம்பர் 1 தொலைபேசி தயாரிப்பாளராக சம்சுங்கை முந்தச் செய்துள்ளது.

ஆப்பிள் இரண்டாவது இடத்தை வகிக்கும் வேளை ; சீனாவின் சிறந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களில் ஒன்றான Xiaomi நிறுவனம், முதல் காலாண்டில் 14.1% சந்தைப் பங்குடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இவ்வாண்டு தொடக்கத்தில் அறிமுகம் கண்ட சம்சுங்கின், கேலக்ஸி எஸ் 24 சீரிஸ் (Galaxy S24 series) விவேக கைப்பேசிகள், இதுவரை ஆறு கோடிக்கும் அதிகமான விற்பனையை பதிவுச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த எண்ணிக்கை கடந்தாண்டு அறிமுகம் கண்ட Galaxy S23 தொடரின் விற்பனையைக் காட்டிலும் எட்டு விழுக்காடு அதிகமாகும்.

இந்நிலையில், இவ்வாண்டின் முதல் காலாண்டில், ஆப்பிள் விவேக கைப்பேசிகளின் எண்ணிக்கை, ஐந்து கோடியே பத்து லட்சமாக பதிவான வேளை ; கடந்தாண்டு அதே காலகட்டத்தில் பதிவான ஐந்து கோடியே 54 லட்சம் யூனிட்டுகளை காட்டிலும் அது குறைவாகும்.

பாதுகாப்பு கருதி, ஆப்பிள் விவேக கைப்பேசிகள் பயன்பாட்டுக்கு சீனாவில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளே அதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!