
தங்காக், மார்ச்-14 – ஜோகூர், தங்காக்கில் ஓர் உணவகத்தின் முன்பாக 3 சந்தேக நபர்கள் பாராங் கத்தியால் தாக்கியதில், ஆடவர் கொல்லப்பட்டார்.
இரு கும்பல்களுக்கு இடையிலான இச்சம்பவம், நேற்றிரவு 7 மணி வாக்கில் புக்கிட் கங்காரில் நிகழ்ந்தது.
முகமூடி அணிந்தும் முகத்தை சட்டையால் மறைத்தும் இருந்த 3 சந்தேக நபர்கள் பாராங் கத்திகளுடன், பாதிக்கப்பட்ட ஆடவரை துரத்திக் கொண்டு ஓடுவது CCTV கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீஸ் கூறியது.
ஆயுதம் எதுவுமில்லாததால், வெறும் கைகளாலேயே தடுக்க முயன்று கடுமையாக காயமடைந்த அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கண்ணெதிரே ஆடவர் வெட்டிக் கொல்லப்பட்டதை கண்டு உணவகத்திலிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கண்டுபிடிக்க போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள பொது மக்கள் மற்றும் சாட்சிகளிடம் இருந்து தகவல்களையும் போலீஸ் சேகரித்து வருகிறது.



