Latestமலேசியா

மோசடி நிறுவனங்களை அடையாளம் காட்ட வருகிறது SemakMule 2.0 அகப்பக்கம்

கோலாலம்பூர், மார்ச்-4, மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களை அடையாளம் காண பொது மக்களுக்கு உதவும் வகையில், Semak Mule 2.0 இணைய அகப்பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வர்த்தகக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 107 நிறுவனங்கள் இதுவரை அப்பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ ஸ்ரீ ரம்லி முஹமட் யூசூஃப் தெரிவித்தார் ; அவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார் அவர்.

எனவே, மோசடிக்கு ஆளாவதில் இருந்து பொது மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த Semak Mule அகப்பக்கத்தை நன்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, அதன் அறிமுக விழாவில் அவர் பேசினார்.

அப்பட்டியல், அம்மோசடி நிறுவனங்களுடன் பொது மக்கள் அலுவல் வைத்துக் கொள்வதைத் தவிர்க்க உதவும் என டத்தோ ஸ்ரீ ரம்லி நம்பிக்கைத் தெரிவித்தார்.

43 நாடுகளுக்கு 3.8 பில்லியன் ரிங்கிட் பணம் சந்தேகப்படும்படியாக பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதை புக்கிட் அமான் அடையாளம் கண்டிருக்கிறது.

மோசடிப் பணம் என நம்பப்படும் அப்பெரும் தொகை, நாட்டில் பதிவுப் பெற்ற 15 வர்த்தக நிறுவனங்கள் வாயிலாக 2021 முதல் 2023 வரையிலானக் காலக்கட்டத்தில் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

நிறுவனங்களாகப் பதிவுச் செய்துக் கொண்டால், அடிக்கடி பணப்பரிமாற்றம் செய்யலாம் என்பதாலும், பெரியத் தொகையை சுலபமாக மாற்றலாம் என்பதாலும், அந்த யுக்தியே மோசடிக்காரர்களின் தேர்வாக இருப்பதாக டத்தோ ஸ்ரீ ரம்லி கூறினார்.

நிறுவனங்கள் என்ற போர்வையில் இப்படி பில்லியன் கணக்கில் மோசடி பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

அதனை முறியடிக்கும் விதமாகத் தான் இந்த Semakmule 2.0 இணைய அகப்பக்கம் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!