
கூச்சிங், மார்ச் 24 – உலகளாவிய நிலையில் நீர் தட்டுப்பாடு இருக்கும் அபாயத்தைக் கொண்ட நாடுகளின் பிரிவில் மலேசியா இடம்பெறவில்லை.
இதற்கு நாட்டில் இன்னும் போதுமான அளவுக்கு சுத்தகரிக்கப்படாத நீர் வளங்கள்
இருப்பதே காரணம் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ படிலா யூசோப் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த நீர் வள மேலாண்மை, ஆற்றுப் படுகைப் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நீர் விநியோக அமைப்பின் செயல்திறன் ஆகியவற்றில்தான் தீர்க்கப்பட வேண்டிய உண்மையான சவால்கள் உள்ளன.
மலேசியா ஆண்டுக்கு சராசரியாக 2,500 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையைப் பெறும் அதே வேளையில் , ஆண்டுக்கு 580 பில்லியன் கன மீட்டருக்கும் அதிகமான நீர் வளம் இருப்பதையும் படிலா யூசோப் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம், நாடு நீர் வளங்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது .
நாட்டின் முக்கிய சவால் நீர் பற்றாக்குறை அல்ல, மாறாக, நீண்டகால நீர் விநியோகத்தின் பாதுகாப்பு, மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நீர் வளங்களை நாம் எவ்வாறு ஆக்கப்பூர்வமாக நிர்வகித்து, பாதுகாத்து, மேம்படுத்துகிறோம் என்பதே மிகவும் முக்கியம் என படிலா யூசோப் தெரிவித்தார்.
‘நீர் திவால்’ என்ற சொல், நீர் வளங்களின் பற்றாக்குறையை மட்டும் குறிக்கவில்லை, மாறாக தூய்மைக்கேடு அதிகரிப்பினால் பாதிக்கப்படும் நீரின் தரத்தின் அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது என அவர் விவரித்தார்.



