
துபாய், ஏப்-17- தனது முதலாவது பறக்கும் டாக்சி நிலையத்தை துபாய் நிறைவு செய்துள்ளது. இதன்வழி இந்த ஆண்டின் இறுதிக்குள் வணிகச் செயல்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய அரபு சிற்றரசின் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
துபாயில் சிறப்பாக உருவாக்கப்பட்ட முதல் மின்சார செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறக்க (eVTOL) ஏர் டாக்ஸி நிலையத்தை துபாயின் பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபு சிற்றரசின் துணைப் பிரதமருமான ஷேக் ஹம்டான் பின் முகமட் ( Sheikh Hamdan bin Mohammed)
பார்வையிட்டதாக ஐக்கிய அரபு சிற்றரசின் ஊடக அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகிலேயே இது போன்ற முதல் நிலையம் என விவரிக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தில், மொத்தம் 3,100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நான்கு தளங்கள், இரண்டு அடுக்கு வாகன நிறுத்துமிடம், இரண்டு பறக்கும் டாக்ஸி புறப்பாடு மற்றும் தரையிறக்கத் தளங்கள் மற்றும் பிரத்யேக மின்னேற்ற உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.
துபாய் நகரின் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலையம், வான்வழி டாக்சி செயல்பாடுகளுக்கான பிரதான மையமாக செயல்படும் என்றும், ஆண்டுக்கு 170,000 பயணிகள் வரை கையாளும் திறன் கொண்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூன்று பறக்கும் டாக்சி நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும் ஐக்கிய அரபு சிற்றரசின் அதிகாரிகள் தெரிவித்தனர்.



