Latestமலேசியா

டிங்கில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

டெங்கில் அருகே தாமான் பெர்மாத்தாவில் (Taman Permata Dengkil) அமைந்துள்ள Sri Maha Mariamman ஆலயத்தின் 2ஆவது மகா கும்பாபிஷேகம் நேற்று பக்தி பூர்வமாக நடைபெற்றது.

இதனுடன், புதிதாகக் கட்டப்பட்டுள்ள சிவன் ஆலயத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

புத்ராஜெயா மேம்பாட்டுத் திட்டத்திற்காக பிராங் பெசார், மெடெங்க்லி, செட்ஜ்லி, காலவே மற்றும் புக்கிட் டாமார் (Prang Besar, Medengely, Sedgely, Gallaway, Bukit Damar) தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் டெங்கில் அருகே தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு குடியமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்காக 1998ஆம் ஆண்டு இந்த ஆலயம் கட்டப்பட்டது.

பின்னர், 2001ஆம் ஆண்டு முதல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதாக ஆலய நிர்வாகம் தெரிவித்தது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த 2ஆவது மகா கும்பாபிஷேகத்தை ஸ்ரீ நடராஜ சிவாச்சாரியார் சிவாச்சாமிகள் தலைமையில், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த 12 வேத விற்பன்னர்கள் நடத்தி வைத்தனர்.

சுமார் 3,000 பக்தர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பி. சகாதேவன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், புதிய ஆலயங்களைக் கட்டுவதோ அல்லது கும்பாபிஷேகம் நடத்துவதோ ஆலயங்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். இல்லையெனில், ஆலய நிர்வாகங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறினார்.

மேலும், ஆலயங்களை அமைக்கும் போது நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், குறிப்பாக புறம்போக்கு அல்லது அரசுக்குச் சொந்தமான நிலங்களில் ஆலயங்களைக் கட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்திய கும்பாபிஷேக குழுத் தலைவர் டத்தோ ரவிசந்திரனுக்கும் ஆலய நிர்வாகத்தினருக்கும் வந்திருந்த பிரமுகர்கள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.

இதனிடையே, மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து இன்று ஜூலை 6 முதல் அடுத்த 24 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளதாகவும், அதனுடன் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறும் ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!