
கோலாலாம்பூர், மே-20-கோலாலாம்பூர், செராஸ், தாமான் செகாரில் உள்ள குடியிருப்பு நிலங்களின் நிலுவை உரிமத்தை (Leasehold), நிரந்தர உரிமமாக (Freehold) மாற்றுவதற்கு முறைகேடாக உதவினார் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஆராய்ச்சியாளர் Zaharah Sulaiman மற்றும் சமூக ஆர்வலர் Badrul Hisham Shaharin ஆகியோர், ஹானா இயோ குறுகிய காலத்தில் இந்த நில உரிமை மாற்றத்தை அவசர அவசரமாகச் செய்து முடித்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் காணொளி மற்றும் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் கடுமையான அவதூறு என்று சாடியுள்ள செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹானா இயோ, தமக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், நில உரிமை மாற்றச் செயல்முறைகளுக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும் என்றும், இத்தகைய ஆதாரமற்ற வதந்திகள் பொது மக்களிடையே தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



