
கோலாலம்பூர், செப்-29-தமது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் நேற்று திடீரென்று மரணமடைவார் என்று தாம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் தெரிவித்திருக்கிறார். சித்தி ஹஸ்மா இறப்பதற்கு முந்தைய இரவு நல்ல உடல்நிலையில் இருந்ததாகவும் அவர் கூறினார்.
இறுதி மரியாதை செலுத்த வந்த பகாங் சுல்தான் Al Sultan Abdullahவுடன் அவர் உரையாடும் காணொளி சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவ்விஷயத்தைக் கூறிய மகாதீர், அரச குடும்பத்தினர் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சித்தி ஹஸ்மா நேற்று காலை சுமார் 9.25 மணியளவில் தேசிய இருதய சிகிச்சைக் கழகமான IJNனில் தமது 100 ஆவது வயதில் காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு, நல்லுடல் புத்ராஜெயாவில் உள்ள புசாரா நெகாராவில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவைத் தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தியதுடன், அவரது கனிவான குணம், கண்ணியம் மற்றும் நாட்டிற்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர். இறப்பதற்கு முந்தைய இரவு அவர் நல்ல மனநிலையில் இருந்ததாக அவரது புதல்வர் Mokhzani Mahathirரும் கூறியிருந்தார்.
இதனிடையே, சித்தி ஹஸ்மா இறக்கும் வரை மகாதீர் அவருடன் இருந்ததாக மற்றொரு புதல்வரான Mukhriz Mahathir தெரிவித்தார். 70 ஆண்டுகள் மனமொத்த தம்பதியராக இருந்த மகாதீர்- சித்தி ஹஸ்மாவுக்கு 4 சொந்தப் பிள்ளைகளும் 3 தத்துப் பிள்ளைகளும் உள்ளனர்.



