Latestமலேசியா

RIBI திட்டம்: இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பு, மேம்பாட்டிற்கு RM50 மில்லியன் – KPKT

புத்ராஜெயா, மார்ச்-26-RIBI என்றழைக்கப்படும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்காக அரசாங்கம் RM50 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்நிதி, சபா, சரவாக் உட்பட நாடு முழுவதும் உள்ள RIBI வழிபாட்டு இல்லங்களுக்கு வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன; கடைசி நாள் வரும் மார்ச் 31-ஆம் தேதி என, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சான KPKT கூறியது.

பன்முக அடையாளத்தையும் ஒற்றுமையையும் கட்டிக் காக்கும் மடானி அரசாங்கத்தின் கடப்பாட்டை இம்முயற்சி பிரதிபலிப்பதாக, அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

ஒவ்வோர் அமைப்புக்கும் அதிகபட்சம் RM250,000 வரை நிதி வழங்கப்படும் என்றார் அவர்.

வழிபாட்டுத் தலங்களைப் பழுது பார்க்கும் பணிகள், புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள், புதிய கட்டடங்கள் அமைத்தல், வெள்ளம், நிலச்சரிவு, தீ போன்ற அவசர சூழ்நிலைகளுக்கான உதவி ஆகியவற்றுக்கு இச்சிறப்பு நிதியைக் கோரலாம்.

விண்ணப்பம் தகுதியுடையதாக இருக்க…ஆலயங்கள் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், அமைப்பின் பெயரில் வங்கி கணக்கு இருக்க வேண்டும், நில உரிமை ஆவணம் அல்லது வாடகை ஒப்பந்தத்தைச் சமர்ப்பிக்க வேண்டும், RM250,000-ஐ மீறாமல் விண்ணப்பிக்க வேண்டும், ஏற்கனவே ஒப்புதல் பெற்ற திட்டங்கள் முடிக்கப்பட்டு, இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.

2023 முதல் மடானி அரசாங்கம் ஆண்டுதோறும் இந்த RM50 மில்லியன் நிதியை ஒதுக்கி வரும் நிலையில், இதுவரை RM140.4 மில்லியன் நிதி 1,195 வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சொன்னார்.

தகுதியான அமைப்புகள், e-RIBI (eribi.kpkt.gov.my) வழியாக நிதிக்கு விண்ணப்பிக்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!