
கோலாலம்பூர், மார்ச் 3 – லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி ஒரு சந்தேகப் பேர்வழி என ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சியின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாகி ( Azam Baki ) உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்பான ஒரு வீட்டில் உட்பட மூன்று வளாகங்களில் 170 மில்லியன் ரிங்கிட் மற்றும் 70 லட்சம் ரிங்கிட் மதிப்புடை ய 16 கிலோ தூய்மையான தங்கக் கட்டிகள் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அசாம் பாகி இத்தகவலை வெளியிட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட 17 கோடி ரிங்கிட்டில் தாய்லாந்தின் Bhat நாணயம், சவுதி அரேபியாவின் ரியால் , பிரிட்டிஷ் ஸ்டெர்லிங், சீன நாணயமான வூன், Ero நாணய , சுவிஸ் பிராங் ஆகிய வெளிநாட்டு நாணயங்களும் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் நகைகள் இன்று செய்தியாளர் கூட்டத்தில் காட்டப்பட்டது.
கேள்விக்குரிய ‘பாதுகாப்பு இல்லத்தில்’ 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது, பெரா ( Bera) நாடாளுமன்ற உறுப்பினரை சந்தேக நபராக உறுதிப்படுத்துகிறது. இந்த வழக்கில் அவர் சந்தேக நபர் என்று என்னால் கூற முடியும், ஏனெனில் MACC சட்டத்தின் 36 ஆவது பிரிவின்படி சொத்து விவரங்களை தெரிவிக்கும்படி அவரிடம் கேட்கப்பட்டுள்ளதாக அசாம் பாகி கூறினார்.
இரண்டாவதாக, இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டதற்கும் இஸ்மாயில் சப்ரிக்கும் தொடர்பு இருக்கும்போது, இது குறித்து அவரிடம் விளக்கம் பெற வேண்டும் என்றும் அசாம் பாகி தெரிவித்தார். முன்னதாக, இஸ்மாயில் சப்ரியுடன் தொடர்புடைய ஊழல் பணமோசடி , சொத்து விவரம் தொடர்பான விசாரணையில் மேலும் 10 சாட்சிகளை எம்ஏசிசி அழைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தனது முன்னாள் மூத்த அதிகாரி உட்பட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரம் இஸ்மாயில் சப்ரியை MACC அழைத்தது.