Latestமலேசியா

2026 பினாங்கு தைப்பூசம்: தங்க இரத வசூல் RM132K, தண்ணீர் மலை வசூல் RM120K

ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-6-பினாங்கு தண்ணீர் மலை பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் 240-ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தேறிய நிலையில், இன்று உண்டியல் காணிக்கை வசூல் எண்ணப்பட்டது.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது மக்கள் அதில் கலந்துகொண்டனர்.

காணிக்கை வசூல் துல்லியமாக இருப்பதை உறுதிச் செய்ய, கடுமையான வடிகட்டல் முறையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

காலை 9 மணிக்குத் தொடங்கிய வசூல் எண்ணிக்கை பிற்பகல் 3 மணிக்கு முடிவுற்ற போது, தங்க இரத ஊர்வலத்தில் திரண்ட வசூல் RM132,665.00 என கணக்கிடப்பட்டது; இதில் சில்லறை காசுகளும் அந்நிய நாணயங்களும் கணக்கில் கொள்ளப்படவில்லை.

தங்கக் காணிக்கையாக 10.65 கிராம் தங்கம் செலுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் தண்ணீர் மலையான் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலில், சில்லறைக் காசுகள் மற்றும் அந்நிய நாணயங்கள் சேர்க்காமல் உண்டியல் வசூலாக RM120,269.00 திரண்டுள்ளது; தவிர 26.72 கிராம் தங்கக் காணிக்கையும் பதிவாகியுள்ளது.

தங்க இரத வசூல் முழுக்க முழுக்க இந்துக் சமூக நலன் மற்றும் கல்விக்காக பயன்படுத்தப்படும்.

தண்ணீர் மலை கோவிலின் வசூல், ஆலயப் பராமரிப்பு, வசதி மேம்பாடு மற்றும் நிர்வாகத்திற்காக செலவிடப்படும் என அறப்பணி வாரியம் அறிக்கையொன்றில் அறிவித்தது.

இவ்வேளையில், பாகானில் உள்ள இடுகாட்டில் புதிய கருமக்கிரியை இட கட்டுமானத்திற்காக 1.5 மில்லியன் ரிங்கிட் வழங்கிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கு 240,000 ரிங்கிட் நன்கொடை வழங்கிய பினாங்கு முதல்வர் சாவ் கொன் இயோவ், 100,000 ரிங்கிட் வழங்கிய தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோருக்கு, அறப்பணி வாரியம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

இந்த பங்களிப்புகள் பினாங்கில் பல்வேறு சமூகங்களின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

RSN ராயர் தலைமையில், இந்து அறப்பணி வாரியம் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் என அவ்வறிக்கை மேலும் கூறிற்று.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!