
கோலாலம்பூர், ஏப்ரல்-22, நாட்டில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்குகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இனி K9 மோப்ப நாய்கள் பணியில் அமர்த்தப்படும்.
குறிப்பாக EDM எனப்படும் மின்னியல் நடன இசையை உட்படுத்திய இசை நிகழ்ச்சிகளுக்கு மோப்ப நாய்களின் சேவைப் பெறப்படும்.
நிகழ்ச்சி தொடங்கும் முன்னரும், நிகழ்ச்சியின் போதும் திடீர் சோதனைகளை நடத்த அவை பயன்படுத்தப்படுமென, இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோ தெரிவித்தார்.
இதன் மூலம் போதைப்பொருளை யாரும் திருட்டுத்தனமாக அரங்கினுள் கொண்டுச் செல்வதைத் தடுக்க முடியுமென்றார் அவர்.
இளையோர் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டை முறியடிக்கும் முயற்சியில், இசை நிகழ்ச்சிகளுக்கு அமைச்சு விதித்துள்ள 5 புதிய நிபந்தனைகளில் இதுவும் ஒன்றாகும்.
உள்துறை அமைச்சு, AADK எனப்படும் தேசியப் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இப்புதிய SOP நடைமுறைகளுக்கு உட்பட்ட இடங்களாக புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கம், செப்பாங் அனைத்துலக பந்தயத் தளம் ஆகியவற்றையும் அமைச்சர் பெயர் குறிப்பிட்டார்.
அவ்விரு அரங்கங்களும் இசை நிகழ்ச்சி அட்டவணைகளை ஒவ்வொரு மாதமும் போலீஸ், சுகாதார அமைச்சு மற்றும் AADK-வுடன் பகிர்ந்துகொள்ளும் என ஹானா சொன்னார்