Latestமலேசியா

‘kencing’ கவிதையால் மக்களவையில் கடும் அமளி; அஹ்மாட் மஸ்லான் பதவி விலக PH எம்.பி.க்கள் வலியுறுத்தல்

கோலாலம்பூர், நவம்பர்-17,பொதுப்பணித்துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் மஸ்லான், நேற்று மக்களவையில் பாடிய சர்ச்சைக்குரிய கவிதையால் கடும் அமளி ஏற்பட்டதுடன், அவர் பதவி விலக வேண்டுமென பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

2027 பட்ஜெட் விவாதத்தின் போது, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்து பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் Rosol Wahid எழுப்பிய கேள்விக்கு அஹ்மாட் மஸ்லான் பதிலளித்தார்.

அதாவது, நெடுஞ்சாலைக் கட்டண இரத்து, PTPTN கல்விக் கடன் இரத்து, பெட்ரோல் விலையை ஒரு ரிங்கிட் 50 சென்னாகக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை பாரிசான் நேஷனல் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அந்த வாக்குறுதிகளை வழங்கியவர்களே அதற்குப் பதிலளிக்க வேண்டுமென மறைமுகமாக பக்காத்தானை சீண்டிய மஸ்லான், தொடர்ந்து அரசியல் கிண்டல் கலந்த கவிதை ஒன்றையும் பாடினார்.

அதில், ஏமாறாமல் இருக்க விரும்பினால் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிக்குமாறு குறிப்பிட்டதுடன், ‘kencing’ என்ற மலாய் வார்த்தையையும் பயன்படுத்தினார்.

பொதுவாக ஏமாற்றப்படுவதைக் குறிக்கும் அந்த வார்த்தைக்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் உடனடியாக கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

அஹ்மட் மஸ்லான் ஒற்றுமை அரசாங்கத்தின் துணையமைச்சராகப் பேசுகிறாரா அல்லது அம்னோ தலைவராகப் பேசுகிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.இதனால் அவையே பரபரப்பானது.

இதையடுத்து, சர்ச்சைக்குரிய வார்த்தையைத் திரும்பப் பெறுமாறு துணை சபாநாயகர் டத்தோ ரம்லி நோர் பலமுறை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அஹ்மாட் மஸ்லான் ஒருவழியாக அதனை மீட்டுக்கொண்டார்.

பின்னர் கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்திய பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , ஒற்றுமை அரசாங்கத்தில் பதவி வகித்துக்கொண்டே அதே அரசாங்கத்தை விமர்சிப்பது ஏற்புடையதல்ல என சுட்டிக் காட்டினர்.

போர்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருன், உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முஹமட் சானி ஹம்சான் உட்பட மேலும் பல பக்காத்தான் ஹராப்பான் எம்.பி.க்களும், அரசாங்கத்தின் கொள்கைகளுடன் உடன்பாடு இல்லையென்றால் அஹ்மட் மஸ்லான் துணையமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தினர்.

பாரிசான் – பக்காத்தான் தலைவர்களிடையே வெளியில் நிலவிய உரசல் தற்போது மக்களவையிலும் வெடித்துள்ளது ஒற்றுமை அரசாங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!