Latestஉலகம்

UNHCR அலுவலகம் முன் திரண்ட 100-க்கும் மேற்பட்ட ரொஹிங்யா அகதிகளை லாரிகளில் ஏற்றிச் சென்ற போலீஸ்

கோலாலம்பூர், ஜூலை-28-கோலாலம்பூரிலுள்ள ஐநா அகதிகள் அமைப்பான UNHCR அலுவலகத்தின் முன் திரண்ட 100-க்கும் மேற்பட்ட ரொஹிங்கியா அகதிகளை, அதிகாரிகள் கைதுச் செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

​பினாங்கில் உள்ளூர்வாசிகளால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் இந்த அகதிகள், தங்களுக்கு உடனடியாக அடைக்கலமும் மறுவாழ்வு உதவியும் கோரி பேருந்துகள் மூலம் தலைநகர் வந்தடைந்தனர்.

​பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இவர்கள் Jalan Bukit Petaling-லில் திரண்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பொது மக்களிடையே அதிருப்தியும் ஏற்பட்டது.

இதையடுத்து, நேற்றிரவு 8:30 மணியளவில், போலீஸார் 4 லாரிகளில் 100-க்கும் மேற்பட்ட அகதிகளை மேல் விசாரணைக்காக கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்திற்கு ஏற்றிச் சென்றனர்.

​இந்நிலையில், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போலீஸ், குடிநுழைவு இலாகா மற்றும் கோலாலம்பூர் மாநகர மன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

​மலேசியாவின் சட்ட திட்டங்களுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும், பொது இடங்களை ஆக்கிரமிக்கவோ போக்குவரத்துக்கு இடையூறு செய்யவோ யாருக்கும் உரிமையில்லை என்றும் பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார்.

​முறையான ஆவணங்கள் இல்லாதவர்களைக் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறும், அதே வேளையில் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கையாளும்போது கவனமாகச் செயல்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

​நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைப் பேணுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அவர் சொன்னார்.

UNHCR தரவுகளின்படி, கடந்த பிப்ரவரி இறுதி நிலவரப்படி மலேசியாவில் சுமார் 126,000 ரொஹிங்கியா முஸ்லீம்கள் பதிவுச் செய்துள்ளனர்.

என்றாலும், பதியப்படாத பல ஆயிரக்கணக்கான அகதிகள் இன்னும் நாட்டில் இருப்பதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!