
கூச்சிங், அக்டோபர்-31 – சரவாக்கில் மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நோக்கில், மலேசிய சரவாக் பல்கலைக்கழகமான UNIMAS-சில் மருத்துவ மாணவர்களுக்கான இடங்களை இரட்டிப்பாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது, தற்போது ஆண்டுக்கு சுமார் 40 மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்படும் நிலையில், அந்த எண்ணிக்கையை 80-தாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான செலவுகளை, சரவாக் அறக்கட்டளை வாயிலாக மாநில அரசே ஏற்கும் என சரவாக் பிரீமியர் தான் ஸ்ரீ Abang Johari Openg தெரிவித்தார்.
குறிப்பாக, சரவாக்கின் கிராமப்புறங்களிலும் தொலைதூரப் பகுதிகளிலும் நிலவும் மருத்துவர்களின் பற்றாக்குறைக்குத் தீர்வு காண இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவிர, மாநிலத்தில் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், அதிகமான உள்ளூர் மாணவர்கள் மருத்துவத் துறையில் பணியாற்ற வழிவகுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.



