
பாங்கி, ஜூலை 29 – தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) குறித்த ஆர்வத்தையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட ‘Who Wants To Be A Scientist? 2026’ தேசிய அளவிலான போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்று, யுகேஎம் (UKM) பல்கலைக்கழகத்தில் உற்சாகமான சூழலில் நடைபெற்றது.
UKM இந்திய மாணவர் பிரதிநிதித்துவச் சபை மற்றும் வணக்கம் மலேசியா இணைந்து நான்காவது ஆண்டாக நடத்திய இப்போட்டியில், நாடு முழுவதிலுமுள்ள தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களது அறிவியல் அறிவு, படைப்பாற்றல் மற்றும் சிந்தனைத் திறனை வெளிப்படுத்தினர்.
கடுமையான போட்டிகளுக்குப் பிறகு 90 மாணவர்கள் அரையிறுதிக்குத் தகுதி பெற்று சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களால் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் டாக்டர் மாணிக்கம் ரவிச்சந்திரன், பேராசிரியர் டாக்டர் முகமட் ரஹிம் கமாலுடின், இணைப் பேராசிரியர் டாக்டர் இளங்கோவன் சுந்தரராஜன், டாக்டர் மகாலெட்சுமி அருஜானன் உள்ளிட்ட கல்வியாளர்களுடன், வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி மற்றும் பல்வேறு கல்வி, அறிவியல் துறை பிரமுகர்களும் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
நிகழ்ச்சியை வணக்கம் மலேசியா செய்திப் பிரிவுத் தலைவர் வேதகுமாரி வெங்கிடேசன் தொகுத்து வழங்கிய நிலையில், விறுவிறுப்பான இறுதிச்சுற்றை பேராசிரியர் டாக்டர் முகமட் ரஹிம் கமாலுடின் மற்றும் டாக்டர் மகாலெட்சுமி அருஜானன் இணைந்து நெறிப்படுத்தினர்.
மாணவர்களின் அறிவியல் அறிவுடன், பகுத்தறிவு, தன்னம்பிக்கை மற்றும் மேடைப் பேச்சுத் திறனையும் சோதிக்கும் வகையில் இறுதிச்சுற்று அமைந்தது.
இறுதிச்சுற்றில், கெடா மாநிலம், ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த அக்ஷயா மகாதேவன் (Akshayah Mahadevan) சாம்பியன் பட்டத்தை வென்று RM2,500 ரொக்கப் பரிசைத் தட்டிச் சென்றார்.
சிலாங்கூர், RRI தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த Sudhaarrshen Pusparajah இரண்டாம் இடத்தையும், ஜோகூர், மாசாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த Dilaashan Prabakaran மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.
நான்காவது இடத்தை பினாங்கு, லாடாங் அல்மா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கார்த்திகையேன் பார்த்திபன் பெற்றார். ஐந்தாவது இடத்தை சிலாங்கூர், தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஷவீந்திரன் பாலா சரவணன் (Shavindren Bala Saravanan) வென்றார்.
இதனுடன், அறிவியல் அறிவுடன் சிறந்த மேடை ஆளுமை மற்றும் விளக்கத் திறனை வெளிப்படுத்திய மாணவரை கௌரவிக்கும் வகையில், வணக்கம் மலேசியா வழங்கிய Young Science Ambassador Award வெற்றியாளருக்கு வெற்றிக் கிண்ணத்துடன் RM1,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
ஒரு போட்டியைத் தாண்டி, தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மீதான ஆர்வத்தை விதைத்து, ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்து, தன்னம்பிக்கையுடன் மேடையில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தும் திறனை உருவாக்கும் தேசிய STEM இயக்கமாக ‘Who Wants To Be A Scientist?’ தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளை ஒரே மேடையில் இணைத்த இந்த முயற்சி, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமைக்கு மேலும் ஒரு தேசிய அங்கீகாரமாக அமைந்தது.
நான்காவது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ‘Who Wants To Be A Scientist?’ போட்டி, வெற்றியாளர்களை மட்டும் உருவாக்கும் மேடையாக அல்லாமல், நாளைய விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கும் அறிவியல் இயக்கமாக தனது பயணத்தைத் தொடர்கிறது.
இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஊக்கமாக அமைந்த இந்தப் போட்டி, அடுத்த ஆண்டில் இன்னும் அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்களை அறிவியல் உலகை நோக்கி வழிநடத்தும் என்ற நம்பிக்கையுடன் நிறைவுபெற்றது.



