
கோலாலம்பூர், செப்டம்பர் 27 — நேபாளத்தின் ரசுவாகதி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்குப் பிறகு காணாமல் போன 55 மலேசியர்களின் நிலை குறித்து ஒரு மாதமாகத் தெளிவான பதில் கிடைக்காததால், பிரதமர் நேரடியாகத் தலையிட வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஸ்மா புத்ரா ஏற்பாடு செய்த சந்திப்பில் SMART குழு, காவல்துறை உள்ளிட்ட பல அமைப்புகள் விளக்கமளித்த போதிலும், முக்கிய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
குடும்பங்களிடமிருந்து 98 DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று மாதிரிகள் சீனா–திபெத் வழியாகப் பொருத்தம் காண அனுப்பப்பட்டுள்ள நிலையில், மூன்று மாதிரிகள் மட்டும் ஏன் அனுப்பப்பட்டன என்றும் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
DNA பொருத்துதல் நடவடிக்கைக்கு சுமார் இரண்டு மாதங்கள் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், காணாமல் போனவர்களின் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட நிதிப் பொறுப்புகள் குறித்தும் குடும்பங்கள் கவலை தெரிவித்துள்ளன.
கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரவில்லை எனத் தெரிவித்த அவர்கள், நிலைமை தெளிவாகும் வரை கடன் தவணைகளுக்கு தற்காலிக அவகாசம் அல்லது நிதிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
“இவர்கள் 55 வழக்குக் கோப்புகள் அல்ல; 55 மலேசியக் குடும்பங்கள். எங்களுக்கு மற்றொரு சந்திப்பு வேண்டாம்; பதிலும் உடனடி நடவடிக்கையும் வேண்டும்” எனக் கூறிய குடும்பத்தினர், பிரதமர் நேரில் சந்தித்து சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.



