
கோலாலம்பூர், செப்டம்பர் 9 — ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தேசிய ஆடவர் கபடி அணி தயாராகி வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஆசிய விளையாட்டு விழாவில், 2002ஆம் ஆண்டு முதல் மலேசிய கபடி அணி தொடர்ந்து தனது பங்கேற்பை பதிவு செய்து வருகிறது. அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, 12 வீரர்களைக் கொண்ட தேசிய அணி இம்முறையும் ஆசிய அரங்கில் நாட்டின் சவாலை முன்னெடுக்கிறது.
குழு B-யில் இடம்பெற்றுள்ள மலேசியா, நேபாளம், தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் ஈரான் அணிகளை எதிர்கொள்கிறது. வலுவான அணிகள் இடம்பெற்றுள்ள இந்தக் குழுவில், மலேசிய வீரர்களுக்கு கடுமையான போட்டி காத்திருக்கிறது.
ASP லோகநாதன் கிருஷ்ணன் அணி மேலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், பி. விமலநாதன் மற்றும் பிரபாகரன் மக்ஸ்வரன் பயிற்சியாளர்களாக அணியை வழிநடத்துகின்றனர். தற்போது வீரர்கள் இறுதிக்கட்ட பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
செப்டம்பர் 17ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு KLIA Terminal 1-இல் இருந்து ஜப்பான் புறப்படுகிறது மலேசியக் குழு.
போட்டிப் பயணத்தை நிறைவு செய்த பின்னர் செப்டம்பர் 28ஆம் தேதி நாடு திரும்பும்.
ஆசியாவின் முக்கிய விளையாட்டு மேடையில் மலேசியக் கொடியை ஏந்தி களமிறங்கும் இந்த அணி, சிறப்பான ஆட்டத்தின் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே, அடுத்த ஆண்டு செப்டம்பரில் கோலாலம்பூரில் நடைபெறும் 2027 SEA Games போட்டிகளிலும் கபடி இடம்பெறுகிறது. மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் திமோர்-லெஸ்தே, மியான்மார் உட்பட மொத்தம் ஆறு நாடுகள் கபடி போட்டியில் பங்கேற்க உள்ளன.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய கபடி அணிக்கு வணக்கம் மலேசியா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.



