Latestமலேசியா

ஆடிப்பெருக்கு வழிபாடா… குப்பை திருவிழாவா?; மோரிப் கடற்கரையிம் 3000 லிட்டர் குப்பை சேகரிப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 — ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற ஆன்மிக நிகழ்வுகளுக்குப் பிறகு, வழிபாடு நடைபெற்ற இடங்கள் குப்பை மேடுகளாக மாறும் காட்சிகள் மீண்டும் மீண்டும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்போது பக்தி முடியும் இடத்தில் பொறுப்பும் முடிந்துவிட வேண்டுமா என்ற கேள்வி இன்று எழுகிறது.

இயற்கைக்கு நன்றி செலுத்தும் பெயரில் இயற்கையையே மாசுபடுத்தும் செயல் எப்போது நிற்கும்? இந்த மனநிலை எப்போது மாறும்? மாற்றத்தை யார் கொண்டு வரப் போகிறார்கள்?

கடற்கரையில் குவிந்து கிடக்கும் பூஜைப் பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுகள், உணவுப் பொருட்கள் மற்றும் குப்பைகள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, நமது சமூகத்தின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகின்றன.

தமிழர்களின் பாரம்பரியம் சுத்தத்தையும் ஒழுக்கத்தையும் போதிக்கிறதே தவிர, வழிபாடு முடிந்தவுடன் குப்பைகளை அங்கேயே விட்டுச் செல்வதை அல்ல என்பதே சமூக ஆர்வலர்களின் வேதனையாக உள்ளது.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில், கடந்த ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் மோரிப் கடற்கரையில் சமூக ஆர்வலர் லெலாமேகலா வெங்கிடாசன் தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும் கடற்கரை சுத்தப்படுத்தும் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பக்தர்கள் விட்டுச் சென்ற பூஜைப் பொருட்கள் மற்றும் குப்பைகளை அகற்றியதுடன், சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு பக்தரின் கடமையும் என்பதை தன்னார்வலர்கள் நேரடியாக எடுத்துரைத்தனர்.

2018ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு கொண்டாட்டத்திற்குப் பிறகு மோரிப் கடற்கரையில் குவிந்திருந்த பூஜைப் பொருட்கள் மற்றும் குப்பைகளை கண்டு அதிர்ச்சியடைந்த லெலாமேகலா, இந்த முயற்சியை தனிப்பட்ட முறையில் தொடங்கினார். பின்னர் “Clean Thaipusam” இயக்கத்தின் ஆதரவுடன், இந்த சுத்தப்படுத்தும் பணி ஆண்டுதோறும் தொடர்ந்து வருகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற இரண்டு கட்ட நடவடிக்கையில், முதல் நாளில் 15 பேரும், இரண்டாம் நாளில் 10 பேரும் தன்னார்வலர்களாக பங்கேற்றனர். இரண்டாம் நாளில் பக்தர்கள் அதிகளவில் வருகை தந்ததால், கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றுவது பெரும் சவாலாக இருந்ததாக இவர் தெரிவித்தார்.

சுத்தப்படுத்தும் பணியின் போது, 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 20 முதல் 30 குப்பைப் பைகள் நிரம்பும் அளவிற்கு மாலைகள், பழங்கள், வாழையிலைகள், திருமண அழைப்பிதழ்கள், விளக்குகள் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் மற்றும் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.

மக்கும் கழிவுகளான பழங்கள் விலங்குகளுக்கு வழங்கப்பட்டதுடன், சில பொருட்களை பொதுமக்கள் மறுபயன்பாட்டிற்காக எடுத்துச் சென்றனர்.

“வழிபாட்டிற்காக நாம் எதை எடுத்துச் செல்கிறோமோ, அதையே மீண்டும் திரும்ப எடுத்துச் செல்வதும் நமது பொறுப்பு. குப்பைகளை அங்கேயே விட்டுச் செல்வது பக்தி அல்ல; அது பொறுப்பின்மை. ஆடிப்பெருக்கு இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழா என்பதால், இயற்கையை பாதுகாப்பதில்தான் அந்த நன்றியின் அர்த்தம் இருக்கிறது,” என்று லெலாமேகலா வலியுறுத்தினார்.

இதனிடயே, அடுத்த ஆண்டு ஆடிப்பெருக்கில் பங்கேற்பவர்கள் தேவையான பூஜைப் பொருட்களை திட்டமிட்டு எடுத்துவருவதோடு, வழிபாடு முடிந்ததும் தாங்கள் கொண்டு வந்த அனைத்துப் பொருட்களையும் மீண்டும் எடுத்துச் சென்று, கடற்கரையை தாங்கள் வந்ததற்கு முன் இருந்ததைப் போலவே சுத்தமாக விட்டுச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த அலட்சியம் தொடர்ந்தால் எதிர்காலத்தில் கடற்கரைகளில் ஆடிப்பெருக்கு வழிபாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சூழல் உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

இவ்வேளையில் தன்னோடு இணைந்து இந்த முயற்சியில் பங்கேற்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும், குறிப்பாக “Clean Thaipusam” இயக்கத்திற்கும் லெலாமேகலா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!