
சுபாங் – ஜூலை -8 – பி.கே.ஆர் கட்சியின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் தத்தம் கருத்துகளை முன்வைக்க முழு சுதந்திரம் உண்டு.
ஆனால், அது முறையாகவும் பொறுப்போடும் பயன்படுத்தப்பட வேண்டும்; மாறாக அவதூறு பரப்பவும், அபாண்டங்களை அள்ளி வீசவும் அல்ல என, கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நினைவுறுத்தியுள்ளார்.
பேச்சுரிமை என்பது பி.கே.ஆர் மட்டுமின்றி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராநிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் முதன்மை பலமாகும்; ஆனால் அது முறையாகவும் பண்பாகம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றார் அவர்.
INSKEN ஏற்பாட்டில், சுபாங்கில் Changemakers IICS மற்றும் சமூகத் தொழில்முனைவர் அறிமுக விழாவில் பங்கேற்ற பிறகு ரமணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆங்காங்கே ஒரு சிலர் கருத்துகளைச் சொல்லத்தான் செய்வார்கள்; அரசியலில் இது சகஜமான ஒன்று; அது போன்ற விமர்சனங்கள் நிலைத்தன்மையைப் பாதிக்காது.
எனவே, தம்மைப் பொருத்த வரை, பி.கே.ஆர் கட்சி அன்வாரின் தலைமையில் வலுவுடனேயே உள்ளது; அவர் தொடர்ந்து கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் இருப்பார் என, தொழில்முனைவர் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான ரமணன் சொன்னார்.
நீதிபதிகள் நியமனங்கள் தொடர்பில் விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென, நேற்று பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முன்னாள் துணைத் தலைவரும் பொருளாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி தலைமையில், செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் உள்ளிட்டோர் அச்செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.