
குவாந்தான், ஜூலை-23- “சூப்பர்மேன்” சாகசம் செய்தது உட்பட மோட்டார் சைக்கிள்களை ஆபத்தான முறையில் ஓட்டியதாக மூன்று இளம் பெண்கள் மீது குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17 மற்றும் 18 வயதுடைய இருவர், குற்றத்தை ஒப்புக் கொண்டனர். ஆயினும் அவர்களின் தோழியான 21 வயது பெண் தம் மீதான குற்றத்தை மறுத்தார்.
இம்மாதம் 16 ஆம் தேதி Kuantan Sentral முனையத்திலிருந்து Bukit Rangin நோக்கிச் செல்லும் சாலையில் அக்குற்றத்தைச் செய்ததாக 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 15,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படும்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட இருவரையும் 3, 000 ரிங்கிட் பிணையத் தொகையிலும், 2,000 ரிங்கிட் பிணையத் தொகையிலும் விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டது.
அடுத்தக் கட்ட விசாரணைக்காக ஆகஸ்ட் 26-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.
சம்பந்தப்பட்ட மூன்று இளம் பெண்களும் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதும், அதில் ‘சூப்பர்மேன்’ போன்ற சாகசங்களைச் செய்வதும் அடங்கிய காணொளியொன்று முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.



