Latestமலேசியா

“இணையவழி தீங்குகள்” வரையறை விரிவாக்கம்: விபத்துக் காட்சிகளைப் பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை – ஃபாஹ்மி எச்சரிக்கை

புத்ராஜெயா, ஜூன்-9-மலேசியாவில் சாலை விபத்துகள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் மற்றும் கோரமான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

​இணையவழி தீங்குகள் என்பதன் தற்போதைய வரையறையை விரிவுபடுத்தி, இத்தகைய கொடூரமான காட்சிகளையும் அதில் சேர்க்க அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கெடாவில் 6 குடும்ப உறுப்பினர்கள் பலியான துயரமான விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

​பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மன உளைச்சலைத் தவிர்க்கவும், பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் இந்த நடவடிக்கை அவசியம் என அவர் கூறினார்.

இதனிடையே, உள்ளூர் மொழிகள் மற்றும் _slang_ எனப்படும் வட்டார வழக்குகளில் பதிவிடப்படும் தேவையற்ற உள்ளடக்கங்களைக் கண்டறிவதில் சமூக ஊடகங்களின் AI தொழில்நுட்பம் இன்னும் பின்தங்கியே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

​புதிய இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இத்தகைய உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தத் தவறும் சமூக ஊடக நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

பாதுகாப்பான மற்றும் பொறுப்பான முறையில் தற்கொலைச் செய்திகளை பிரசுரிப்பது தொடர்பில் புத்ராஜெயாவில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றப் பிறகு ஃபாஹ்மி செய்தியாளர்களிடம் பேசினார்.

அதில் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுல்கிஃப்ளி அஹ்மாட்டும் கலந்துகொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!