Latestமலேசியா

இந்து மதப் புனிதச் சின்னத்தை அவமதித்த வழக்கு: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்தார் தமீம் டாஹ்ரி

லங்காவி, ஜூலை-21 – இந்து மத புனிதச் சின்னமான திரிசூலத்தை மிதித்து அவமதித்த வழக்கில் சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் தமீம் டாஹ்ரி அப்துல் ரசாக் (Tamim Dahri Abdul Razak), இன்று கெடா, லங்காவி மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

எனினும், தாம் அந்தப் பொருளை ‘துருப்பிடித்த கூர்மையான இரும்புத் துண்டு’ என்று தவறாக நினைத்துவிட்டதாகவும், மதச் சின்னத்தை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்றும் ஏற்கனவே கூறி வந்த அவர், குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

இதையடுத்து, 10,000 ரிங்கிட் தொகையுடன், இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அவர் ஜாமீனில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மேலும், அவரது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வழக்கு மீண்டும் செவிமெடுப்புக்கு வருகிறது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் லங்காவியில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் 192 போலீஸ் புகார்கள் பதிவுச் செய்யப்பட்டன.

இதையடுத்து கைதாவதிலிருந்து தப்பிக்க, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்ட தமீம் டாஹ்ரி மீது, குற்றவியல் சட்டத்தின் 295-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

சுமார் 4 மாதங்களாகத் தாய்லாந்தில் தலைமறைவாக இருந்த அவர், சில தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பி போர்டிக்சன் போலீஸிடம் சரணடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, கைதுச் செய்யப்பட்ட அவர், லங்காவியில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!