சுங்கை பூலோ, ஏப்ரல்-10, புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, இறைச் சிந்தனையை மனத்தில் நிறுத்தி, இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும், தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்
வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
வேற்றுமைகளை களைந்து அனைவரிடமும் சகோதரத்துவம் பேணுகின்ற இஸ்லாமிய பெருமக்களின் மனித நேயமும், அவர்களின் நோன்புக் கடமையை உணர்ந்து, மற்ற இனத்தவர்களும் விட்டுக் கொடுத்து முழு ஒத்துழைப்பு வழங்கி பொறுமை காக்கும் மனப்பாங்கும் மலேசியாவுக்கே உண்டான தனிச்சிறப்பாகும்.
மூவினத்தாரும் ஒற்றுமையாக வாழ்ந்து மனிதம் பேணும் மகத்துவம் வேறெங்கும் கிடையாது என
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் இந்நன்னாளில் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டிய படி, பிறப்பு தொடங்கி இறப்பு வரை ஒருவர் மற்றவருக்கு ஈகை செய்து, உதவி புரியும் குணம் காலத்திற்கும் தொடர வேண்டும்.
பணமோ பொருளோ, தேவையில் இருப்போருக்கு தேவையான நேரத்தில் சரியான உதவியை செய்வதுதான் மனிதம் என்றார் அவர்.
மற்றவர்களின் துயர் போக்கி இன்பம் தருகின்ற இஸ்லாமிய அன்பர்களுக்கு, இந்த ஈகைத் திருநாள் அதிகமான மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வர வேண்டும் என பிகேஆர் தேசிய தகவல் பிரிவு துணைத் தலைவருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.