
உலு லங்காட், ஜூன்-10-சிலாங்கூர், உலு லங்காட், சுங்கை மக்காவ் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய 4 மாடி அடுக்குமாடி குடியிருப்பு, எவ்வித முறையான அனுமதியுமின்றி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது.
காஜாங் நகராண்மைக் கழகமான MPKj அதனை உறுதிப்படுத்தியது.
அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒதுக்கப்பட்ட நிலத்திலும், மற்றொரு பகுதி இரண்டு தனியார் நிலங்களிலும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக, அது கூறிற்று.
இந்த கட்டுமானத்திற்கு எவ்வித திட்டமிடல் அனுமதியோ அல்லது உள்கட்டமைப்பு வரைபடங்களோ சமர்ப்பிக்கப்படவில்லை.
இதனால் 1974-ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டடச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் MPKj கூறியது.
இச்சட்டவிரோத கட்டடத்தின் மீது அடுத்தகட்ட கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிரபல வானொலி தொகுப்பாளரும் நடிகருமான Azad Jasmin, zinc தடுகளால் மூடப்பட்ட மற்றும் தற்காலிக மின்சார, நீர் இணைப்புகளைக் கொண்ட இந்த பாழடைந்த கட்டடத்தின் வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து இவ்விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளானது.
இக்கட்டடம் ரொஹிங்கியா அகதிகளின் சட்டவிரோத குடியேற்றமாகப் பயன்படுத்தப்படுவதாக வதந்திகள் பரவிய நிலையில், நில உரிமையாளர் தான் ரொஹிங்கியா குடியேற்றத்தை அனுமதித்ததாக, முன்னதாக Dusun Tua சட்டமன்ற உறுப்பினர் Johan Abd Aziz கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



