Latestமலேசியா

ஓட்டுநர் தவறுதலாக கியரை மாற்றியதால் திண்பண்டக் கடைக்குள் பாய்ந்த கார்: கடை உதவியாளர் காயம் 

ஷா ஆலாம், ஆகஸ்ட்.05-  சிலாங்கூர் கிள்ளானில் உள்ள Taman Berkeleyயில் நேற்று பிற்பகலில் பாரம்பரியத் திண்பண்டங்கள் விற்கும் கடை ஒன்றின் மீது கார் மோதியதில் கடை ஊழியர் ஒருவர் காயமடைந்தார். 50 வயது மதிக்கத்தக்க மாது ஒருவர் அக்கடையில் பொருட்களை வாங்கிய பிறகு வாகன நிறுத்துமிடத்திலிருந்து காரை பின்னோக்கி எடுக்க முயன்ற போது அச்சம்பவம் நிகழ்ந்தது. அவர் தவறான கியரை மாற்றி, ஆக்சிலரேட்டரை அழுத்தியதே அவ்விபத்துக்குக் காரணம் என நம்பப்படுவதாக வட கிள்ளான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Ramsay Embol அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

அச்சம்பவத்தை அடுத்து அம்மாது மேல் சிகிச்சைக்காக Sunway மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதே சமயம் காயமுற்ற கடை ஊழியரான 30 வயது மதிக்கத்தக்க பெண் லேசான காயங்களுக்குச் சிகிச்சை பெற KPJ Klang மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

அச்சம்பவம் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. தகவல் தெரிந்த பொதுமக்கள், வட கிள்ளான் மாவட்டக் காவல் தலைமையகத்தின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.

கார் ஒன்று மோதியதால் கடையொன்றின் முன்பகுதி சேதமடைந்ததைக் காட்டும் புகைப்படம் முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!