Latestமலேசியா

கஞ்சா வழக்கு: 5 ஆண்டுகளுக்குப் பின் சிங்கப்பூர் தந்தை மற்றும் 2 மகன்கள் உயர் நீதிமன்றத்தால் விடுதலை

ஷா ஆலாம், ஜூலை-4 – செமஞேவில் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா செடிகளை வளர்த்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு மகன்களை ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

​63 வயது அனியல் செப்னானி (Aniell Sebhnani) மற்றும் அவரது மகன்களான 38 வயது நெதன், 35 வயது சித்தாந்த் ஆகிய மூவர் மீதும் கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் செமஞ்சேவில் உள்ள வாடகை வீடு ஒன்றில் 315.3 கிராம் கஞ்சா கடத்தியதாகவும், 8 கஞ்சா செடிகளை வளர்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அச்சுத் தொழில் செய்து வரும் இம்மூவரும் கடந்த 5 ஆண்டுகளாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

​இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசுத் தரப்பு அதன் குற்றச்சாட்டுகளை முகாந்திரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி மூவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

அந்த வீடு Sean Pete என்ற வேறொரு நபரால் வாடகைக்கு எடுக்கப்பட்டதும், அங்கு மாற்று நபர்களுக்குப் புழக்கம் இருந்ததும் தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர்களால் நிரூபிக்கப்பட்டது.

​நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போதிலும், இம்மூவரும் உடனடியாக சிங்கப்பூர் திரும்ப முடியவில்லை.

மலேசியக் குடிநுழைவு இலாகாவால் அவர்கள் உடனடியாகக் கைதுச் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விடுதலைத் தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!