
ஷா ஆலாம், ஆகஸ்ட் 22 –பலருக்கு சனி, ஞாயிறு ஓய்வு நாட்கள். ஆனால் தொழிலதிபர் சிவா பாரதிக்கு, கோத்தா கெமுனிங் பகுதியில் சுற்றித் திரியும் சுமார் 200 தெரு நாய்களின் பசியைப் போக்கும் நாட்களாகவே அவை மாறியுள்ளன.
COVID-19 பெருந்தொற்றுக்கு முன்பே தொடங்கிய இந்த சேவையை, பல ஆண்டுகளாக இடைவிடாமல் தொடர்ந்து வருகிறார் சிவா. ஒவ்வொரு வார இறுதியிலும் தனது சொந்த செலவில் உணவுகளை வாங்கிச் சென்று, அவைகளுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இவர்.
வேலைப்பளு, தனிப்பட்ட பொறுப்புகள் என எவ்வளவு இருந்தாலும், இந்த சேவைக்காக நேரத்தை ஒதுக்குவதை இவர் தவறவிடுவதில்லை.
“இதைச் செய்யும்போது எனக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது” என்று கூறும் சிவா பாரதி, எந்தவித எதிர்பார்ப்புமின்றி இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
பசியென்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல; பேச முடியாத உயிர்களுக்கும் அதே வேதனையே. அதை உணர்ந்து வாரந்தோறும் 200 நாய்களின் பசியைப் போக்கி வரும் இவரது செயல், கருணை என்பது பெரிய காரியங்களில் மட்டுமல்ல, தொடர்ந்து செய்யப்படும் சிறிய செயல்களிலும் இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது.
சிவா போன்றவர்களின் முயற்சிகள் தனிப்பட்ட சேவையாக மட்டும் நின்றுவிடாமல், மற்றவர்களையும் ஏதாவது ஒரு வகையில் நல்லது செய்யத் தூண்டும் உதாரணமாக அமைய வேண்டும்.
அனைவராலும் 200 நாய்களுக்கு உணவளிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு தெரு நாய்க்கு ஒரு வேளை உணவு, ஒரு கிண்ணம் தண்ணீர், காயமடைந்த உயிருக்கு உதவி — நம்மால் முடிந்த சிறிய பங்களிப்பே கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
கருணையைப் பாராட்டுவதோடு நிற்காமல், நம்மால் முடிந்த இடத்தில் நாமும் அதைத் தொடர்வோம்.



