
காஜாங், ஆகஸ்ட்-31,சிலாங்கூர், காஜாங், தாமான் வெஸ்ட் கண்ட்ரியில் சனிக்கிழமை அதிகாலை கடுமையானக் காயங்களுடன் சாலையோரத்தில் மீட்கப்பட்ட 26 வயது இளைஞரின் கொலை முயற்சி வழக்கில், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 4 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
அதிகாலை இரண்டரை மணியளவில் போலீஸுக்குத் தகவல் கிடைத்த நிலையில், தெரிந்த நபர்களாலேயே கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் அந்த இளைஞர், உடனடியாக சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கைதான நால்வருக்கும் ஏற்கனவே குற்றப் பின்னணி மற்றும் போதைப்பொருள் வழக்குகள் இருப்பதை காஜாங் மாவட்டப் போலீஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் உறுதிப்படுத்தினார்.
இவர்கள் அனைவரும் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் கொலை முயற்சி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



