
கிள்ளான், அக்டோபர்-5,சிலாங்கூர், காப்பாரில் TNB மின்கம்பியைத் திருட முயன்றதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
சுமார் 40 வயதான அந்த உள்ளூர் ஆடவர், கேபிளில் ஒட்டிக் கொண்ட நிலையில் இருப்பதை பொது மக்கள் கண்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனடியாகப் போலீஸாரும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரும் சம்பவ இடம் விரைந்ததாக, வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் Ramsay Embol கூறினார்.
அந்த ஆடவரின் உடலும் கைகளும் கேபிளில் ஒட்டிக் கொண்டிருந்ததை வைத்துப் பார்க்கையில், TNB-க்குச் சொந்தமான மின்கம்பியைத் திருட முயன்றபோது அவரை மின்சாரம் தாக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அவரது உடல் சவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேல் விசாரணையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, மின்சார உள்கட்டமைப்புகளை சேதப்படுத்துவது அல்லது கேபிள்களைத் திருடுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், பொது மக்களுக்கான மின்சார விநியோகத்தையும் பாதிக்கக்கூடும் என போலீஸார் மீண்டும் எச்சரித்துள்ளனர்.



