கிக் தொழிலாளர் சட்டம் 2025; கிக் தொழிலாளர்களுக்குக் கட்டாய சமூக பாதுகாப்புப் பங்களிப்பு

கோலாலம்பூர், மார்ச்-11-2025 கிக் தொழிலாளர் சட்டம் நாட்டின் தொழிலாளர் சந்தையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் வழி, கிக் வேலைகளை இனி வெறும் _’side hustle’_ அதாவது பக்க வேலைகள் அல்லது துணைத் தொழிலாக அல்லாமல், முக்கியத் தொழிலாளர் துறையாக அரசாங்கம் அங்கீகரிக்கிறது.
இச்சட்டம் வரும் மார்ச் 31-ஆம் தேதி முழுமையாக அமுலுக்கு வந்தபிறகு, கிக் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு பங்களிப்பும் கட்டாயமாகிறது.
அவ்வகையில், வேலையிட விபத்து மற்றும் தொழில் சார்ந்த நோய்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESEO-வுடன் தள நிறுவனங்கள் தங்களது கணினி முறைகளை இணைத்து, தானியங்கி முறையில் சந்தா பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
இதன் மூலம், நடப்பில் Lindung Kendiri என பெயர் மாற்றம் கண்டுள்ள சுயதொழில் சமூக பாதுகாப்புத் திட்டமான SKSPS எனப்படும் விருப்பத் தேர்வு அடிப்படையிலான திட்டம் நீக்கப்படுகிறது.
இதற்கு முன்பு, கிக் தொழிலாளர்களில் வெறும் 26 விழுக்காட்டினர் மட்டுமே Lindung Kendiri-க்கு சந்தா பங்களிப்பைச் செய்தனர்.
இதனால், பெரும்பாலானோர் வருமான அதிர்ச்சிகளுக்கு ஆளாகினர்.
தேர்வு முறையில் வழங்கப்படும் திட்டங்களில் வழக்கமாகவே பங்கேற்பு குறைவாகவே இருக்கும்; ஆனால் அதுவே கட்டாய பங்களிப்பு என வந்துவிட்டால், குறிப்பாக e-hailing மற்றும் p-hailing மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு இது மிகப் பெரிய பாதுகாப்பை வழங்கும் என அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பான ILO-வின் Simon Brimblecombe கூறுகிறார்.
ஆனால், இன்னமும் இடைவெளிகள் இருப்பதை நாம் மறுக்க முடியாது.
வேலையின்மை காப்பீடு, ஓய்வூதிய நன்மைகள், குடும்ப மற்றும் மகப்பேறு பாதுகாப்பு போன்ற விரிவான சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் தேவைப்படுகின்றன.
ஏற்கனவே குறைவான EPF சேமிப்பால், மலேசியர்கள் 55 அல்லது 60 வயதில் போதுமான ஓய்வூதிய நிதி இல்லாமல் இருப்பது பெரிய சவாலாக உள்ளதை, Brimblecombe சுட்டிக் காட்டுகிறார்.
இதனிடையே, தள நிறுவனங்களும் கிக் தொழிலாளர்களுக்கு பங்களிக்க வேண்டும் என ISIS Malaysia-வின் Calvin Cheng வலியுறுத்துகிறார்.
தென் கொரியா, போர்ச்சுகல் போன்ற நாடுகளின் மாதிரிகளை எடுத்துக்காட்டும் அவர், கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிச் செய்ய முதலாளிமார்களும் பங்களிக்க வேண்டும் என்கிறார்.
எது எப்படி இருப்பினும், இந்த 2025 கிக் தொழிலாளர் சட்டம், மலேசியாவின் 25 விழுக்காட்டு ஆள்பலத்தைக் கொண்டிருக்கும் அங்கீகரிக்கப்படாத கிக் வேலைகளுக்கு, நீண்டகால சமூக பாதுகாப்பை வழங்கும் முதல் படியாக பார்க்கப்படுகிறது…



