கிள்ளான், ஜூன் 14 – சிலாங்கூர், கிள்ளான், லொபோ கோபெங்கில் (Leboh Gopeng), செயல்பட்டு வரும் இரு கேளிக்கை மையங்களில், நேற்றிரவு மாநில குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், ஒழுங்கீன சேவைகளை வழங்கி வந்ததாக நம்பப்படும், 25 வெளிநாட்டு பெண்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களில் 13 பேர் வியட்நாமையும், எஞ்சிய 12 பேர் தாய்லாந்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் உளவு நடவடிக்கைகள் வாயிலாக, அந்த இரு கேளிக்கை மையங்களிலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, சிலாங்கூர் குடிநுழைவுத் துறை இயக்குனர் கைருல் அமினுஸ் கமுடின் (Khairrul Aminus Kamaruddin) தெரிவித்தார்.
அந்த கேளிக்கை மையங்களில், வேலை நேரத்திற்கு பின்னர் சேவை வழங்க, 500 ரிங்கிட் வரையில், கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கைருல் சொன்னார்.
முறையான அனுமதியோடு செயல்பட்டு வரும் அந்த கேளிக்கை கையங்களில், இதற்கு முன் 2022-ஆம் ஆண்டு குடிநுழைவுத் துறை சோதனை மேற்கொண்டுள்ளது.
இம்முறை கைதுச் செய்யப்பட்ட, 24 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் அனைவரும் முறையான பயண அனுமதியை வைத்திருக்கும் வேளை ; அவர்களில் ஒருவர் மட்டும், வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்யும் அனுமதியை வைத்துள்ளார்.
விசாரணைக்காக, அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம், சோதனையின் போது, அந்த கேளிக்கை மையங்களில் இருந்த ஒன்பது வாடிக்கையாளர்களும், மூன்று உள்நாட்டு பணியாளர்களும், சோதனைக்கு பின்னர் சாட்சியாளர்களாக வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.