
அம்பாங், செப்டம்பர்-18,கிள்ளான் பள்ளத்தாக்கில் வெளிநாட்டினரால் இயக்கப்பட்டு வந்த பெரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீஸார் முறியடித்துள்ளனர்.
அம்பாங், சுபாங் ஜெயா உள்ளிட்ட 6 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 35.24 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆஸ்திரேலியா மற்றும் கனடா கடப்பிதழ்களைக் கொண்ட இரு வெளிநாட்டினரே இந்த கும்பலின் மூளையாகவும், போதைப்பொருள் தயாரிப்பாளர்களாகவும் செயல்பட்டுள்ளதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
இந்தச் சோதனைகளில் 6 உள்ளூர்வாசிகள் மற்றும் 5 வெளிநாட்டினர் உட்பட 11 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
344 கிலோ கிராமுக்கும் அதிகமான மெத்தாம்பேட்டமைன் பொடி, 347 லிட்டர் திரவ மெத் மற்றும் 30 லட்சம் பயனர்களுக்கு விநியோகிக்கப்பட இருந்த பல்வேறு போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், 11 வாகனங்கள், ஒரு துப்பாக்கி மற்றும் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது.
கைதுச் செய்யப்பட்டவர்களில் 5 பேர் மீது அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.



