
கிள்ளான், நவ 13 – நேற்று கிள்ளான் , பெர்சியாரன் ராஜா முடா மூசாவில் ( Persiaran Raja Muda Musa) உள்ள பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்டு அது தொடர்பான காணொளி வைரலான நிலையில், அந்த சந்தேக ஆடவனை போலிசார் நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில், பண்டார் புக்கிட் திங்கி பகுதியில் கைது செய்தனர்.
இதனிடையே, நிகழ்ந்தது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அல்ல எனவும், மாறாக இதற்கு முன் சுபாங் ஜெயாவில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட Toyota Vios காரை தடுத்து சந்தேக ஆடவனை கைது செய்ய போலிஸ்காரர் ஒருவர் முயன்றபோது முரட்டுத்தனமாக அவரை தள்ளியிபின் அந்த ஆடவன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தென் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ரம்லி கஷா (Ramli Kasa) விளக்கமளித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் அந்த ஆடவன் ஓட்டிச் சென்ற கார் போலீஸ்காரரின் காலில் கிட்டத்தட்ட ஏறும் சூழல் ஏற்பட்டதோடு காயமடைந்த போலீஸ்காரர் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா ( Tengku Ampuan Rahimah) மருத்துவமனையில் (HTAR) சிகிச்சை பெற்று வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் ரம்லி கஷா தெரிவித்தார்.
அரசு ஊழியர் கடமையை செய்ய தடுத்தது மற்றும் , கொலை முயற்சி மேற்கொண்டதாக தண்டனைச் சட்டத்தின் 186 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் அந்த ஆடவனுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அவன் மேல் இதற்கு முன் 20 குற்றச் சம்பவங்கள் மற்றும் ஐந்து போதைப் பொருள் குற்றங்களில் சம்பந்தப்பட்ட பின்னணியை கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.



