Latestமலேசியா

கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் காயமடைந்த ஆண் யானை: தினமும் இரு முறை கண்காணித்து வருகிறது PERHILITAN

கோலாலம்பூர், ஆகஸ்ட்-26- பேராக், கெரிக்கில் JRTB எனும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலைப் பகுதியில் இம்மாதம் 17 ஆம் தேதியில் இருந்து ஆண் காட்டு யானையொன்று சுற்றித் திரிவதாகக் கூறப்படுவது குறித்து, மாநில வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடக்கக் கட்ட கண்காணிப்பில் அந்த யானையின் வலது முன் காலில் காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், அதன் உடல்நிலையும் நடமாட்டமும் இயல்பாகவே இருக்கின்றன. அந்த யானையால் தொடர்ந்து நன்றாக உண்ணவும் முடிகிறது. அதோடு காயம் குணமாகும் அறிகுறிகளையும் காட்டுவதாக தீபகற்ப மலேசிய வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அந்த யானையை மீண்டும் காட்டுக்குள் கொண்டுச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நடமாட்டம் மற்றும் உடல்நிலை ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அது கூறியது. அந்த யானை அடிக்கடி சாலைக்கு வருவதால், விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்க தினமும் இரு முறை கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு யானையின் உடல்நிலை மற்றும் காயங்கள் குறித்து அறியவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தேவைப்படுமா என்பதைத் தீர்மானிக்கவும் கால்நடை மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அது விளக்கியது.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைப் பயனீட்டாளர்கள் குறிப்பாக JRTB பாதையில் பயணிப்பவர்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு ஆலோசனை கூறப்படுகிறது. வாகனமோட்டிகள் யானையை புகைப்படம் எடுப்பதையோ அல்லது காணொளி பதிவு செய்வதையோ தவிர்க்க வேண்டும். யானைக்கு உணவளிக்கவோ அல்லது அதற்காக உணவை வெளியே வைத்து விட்டுச் செல்லவோ கூடாது. அதே வேளை கண்காணிப்புப் பகுதியில் இருக்கும் பொதுமக்கள், அமலாக்க அதிகாரிகள் மற்றும் PERHILITAN பணியாளர்களின் நினைவுறுத்தல்களைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!