
கோலாலம்பூர், ஏப்ரல்-6-கெடாவில் மரணத்தில் முடிந்த காயாக் படகு விபத்தைத் தொடர்ந்து, SOP பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது.
பெர்லிஸ் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தைச் சேர்ந்த 2 பயிற்சி ஆசிரியர்கள், கோத்தா குவாலா மூடாவில் உள்ள Pantai Merdeka கடலில் நடைபெற்ற வெளிப்புற நடவடிக்கையின் போது காயாக் படகு கவிழ்ந்து உயிரிழந்தனர்.
தொடக்கக் கட்ட தகவல்களின் படி, கடலில் ஏற்பட்ட பலத்த அலைகள் மற்றும் நீரோட்டம் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
உயிர்காக்கும் ஜேக்கெட்டுகள் அணிந்திருந்தபோதிலும், இருவரும் பின்னர் மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அனைத்து SOP-களும் முறையாக பின்பற்றப்பட்டதா என்பதை அமைச்சு ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கூறினார்.
அதே சமயம் மரண விபத்துக்கான காரணம் குறித்து ஆராய, மலேசியக் கடல் துறையும் கேட்டுக் கொள்ளப்படும் என்றார் அவர்.
இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கப்படும் என ஃபாட்லீனா உறுதியளித்தார்.
இதேபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, அனைத்து கல்வி நிறுவனங்களும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் நினைவூட்டினார்.



