
கெண்டக்கி, ஜூலை-14- அமெரிக்காவின் கெண்டக்கியில் (Kentucky) தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
மேலுமிருவர் பெண்கள் ஆவர்.இரு ஆடவர்கள் காயமடைந்த வேளை அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
விமான நிலையமருகே சாலைத் தடுப்புச் சோதனையின் போது போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரை நோக்கி சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டதே இச்சம்பவத்தின் தொடக்கமாகும்.
அங்கிருந்து ஒரு காரைத் திருடிக் கொண்டு 16 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த அந்த தேவாலயத்திற்கு அவன் தப்பியோடினான்.
அங்கு பிராத்தனைக்காகக் கூடியிருந்தவர்களை நோக்கி அவன் கண்மூடித்தனமாக சுட்டதில், 72 வயது மூதாட்டியும் 32 வயது பெண்ணும் கொல்லப்பட்டனர்.
தகவலறிந்து தேவாலயம் விரைந்த போலீஸ் கொலையாளியை அங்கேயே சுட்டுக் கொன்றது.
கொலையாளியின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
கொலைக்கான காரணமும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், தப்பியோடும் போது அவன் நேரடியாக தேவாலயம் நோக்கிச் சென்றதை வைத்துப் பார்க்கும் போது, அங்குள்ள சிலர் அவனுக்கு அறிமுகமானவர்களாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது.
விசாரணைக்காக தேவாலய வளாகம் மூடப்பட்டுள்ளது.