
பெந்தோங், மே-26-கெந்திங் மலைக்குச் செல்லும் வாகனமோட்டிகள் வரும் வியாழக்கிழமை, மே 28 முதல் சாலைக் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதியக் கட்டண முறையை சாலைப் பராமரிப்பு நிறுவனமான Lingkaran Cekap Sdn Bhd இரண்டு முக்கிய நுழைவாயில்களில் அமுல்படுத்துகிறது.
அவ்வகையில், Genting Sempah நுழைவுப் பகுதி மற்றும் Gohtong Jaya-வில் இச்சாலைக் கட்டணம் வசூலிக்கப்படும்.
முதல் கட்டமாக, கார் மற்றும் வேன் உள்ளிட்ட முதல் வகுப்பு வாகனங்களுக்கு ஒருமுறை நுழைவதற்கு 5 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படும்.
டேக்சிகளுக்கு 3 ரிங்கிட் 30 சென்னும், பேருந்துகளுக்கு 5 ரிங்கிட்டும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர லாரிகளுக்கு 15 ரிங்கிட்டும், கனரக லாரிகளுக்கு அதிகபட்சமாக 25 ரிங்கிட்டும் கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வேளையில், 2, 3, 4 மற்றும் 5-ஆம் வகுப்பு வாகனங்கள் அனைத்தும் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக Lorong Khas பாதைகள் வழியாக மட்டுமே நுழைய வேண்டும் அல்லது வாகனத்தின் பதிவு எண்களை அடையாளம் காணும் LPR – Licence Plate Recognition முறையைப் பயன்படுத்த வேண்டும்.
எனினும், அவசர கால வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்த சாலைக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கெந்திங் மலையில் உள்ள பள்ளிகள் மற்றும் போலீஸ் நிலையங்கள் போன்ற அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் வாகனங்களுக்கும் முறையான பதிவுக்குப் பின் விலக்களிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



