தாம்பருளி, ஏப்ரல் 2 – சபா, கோத்தா கினபாலு, கம்போங் பவாங்கில், பன்றி பண்ணை உரிமையாளரின் செயலால், அருகிலுள்ள தாம்பருளி ஆறு மாசடைந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக, கால்நடைகளின் கழிவுகளை பண்ணை அருகே உள்ள தாம்பருளி ஆற்றில் வீசுவதே அதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஆற்று நீரை இன்னும் சுற்று வட்டார மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பதோடு, தெலிபோங் நீர் சுத்திகரிப்பு நிலையம் வாயிலாக அந்த நீர் துவாரன், தம்பருளி மற்றும் கோத்தா கினபாலுவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு விநியோகிக்கப்படுவது தான்.
பன்றி வளர்ப்பு பண்ணைக்கு அருகில் அமைந்திருக்கும் ஆற்று நீர், பச்சை நிறமாக காட்சியளிப்பதோடு, துர்நாற்றம் வீசுவதும் கண்ணோட்டத்தில் தெரிய வந்துள்ளது.
அதனால், கம்போங் பவாங்கில் நதி நீர் மட்டுமல்லாமல், காற்றின் தரமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் சிலர் கூறியுள்ளனர்.
அது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டு விட்ட போதிலும், நடவடிக்கை எதுவும் இன்றி அந்த பண்ணை தொடர்ந்து வழக்கம் போல செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, பன்றி கழிவு நீர்த்தேக்கத்திலிருந்து, அசுத்தமான துர்நாற்றம் வீசும் நீர், அருகிலுள்ள ஆற்றில் கலக்கும் காணொளி ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்விவகாரம் அம்பலமானது.
இவ்வேளையில், அந்த மாசுபாடு பிரச்சனை தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துவரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ வில்பிரட் மேடியஸ் தாங்காவ் கூறியுள்ளார்.