சரவாக் ஒற்றுமை வாரக் கொண்டாட்டம் 2026: 12 இனப் பிரிவுகளின் கலை சங்கமம் மற்றும் ‘நோபெங்’ கலாச்சாரப் போட்டி

மீரி, மே-10,
Bumi Kenyalang என்றழைக்கப்படும் சரவாக் மாநிலத்தில், 2026-ஆம் ஆண்டுக்கான ஒற்றுமை வாரக் கொண்டாட்டம் பல்லின கலாச்சாரங்களின் சங்கமமாய் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மீரி நகரின் Boulevard Mall பேரங்காடியில் நேற்று தொடங்கி நடைபெறும் இந்த 2-நாள் விழாவில், காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை, பல்வேறு நிகழ்ச்சிகள் மக்களை கவரவிருக்கின்றன.
முக்கிய அங்கமாக, சரவாக்கின் 12 இனக் குழுக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் இசை உள்ளடங்கிய ‘கலாச்சார பரிமாற்ற’ நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.
குறிப்பாக, சரவாக்கின் பாரம்பரியமான Nopeng மற்றும் Bertandak நடனப் போட்டி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
இதில் உள்ளூர் மேள தாளங்களுக்கு ஏற்ப நடனமாடி, கவிதை நயத்துடன் கூடிய பாடல்கள் பாடும் கலை, இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
மற்றொரு சிறப்பம்சமாக, ‘ஒற்றுமை ஆளுமை’ போட்டியில் Tabika Perpaduan பாலர் பள்ளி சிறுவர்கள் நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போல வேடமணிந்து, அவர்களின் வீரவசனங்களைப் பேசி அசத்துகின்றனர்.
சரவாக்கின் தனித்துவமான கலாச்சாரப் பன்முகத்தன்மையை மக்களிடையே கொண்டு சேர்ப்பதும், தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதுமே இந்த விழாவின் பிரதான நோக்கமாகும்.
எனவே, மீரி மக்கள், இலவசமாக நடைபெறும் இந்த ஒற்றுமை வாரக் கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு அழைக்கிறது.



