
கோலாலம்பூர், செப்டம்பர்-16,பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, மதபோதகர் சாகிர் நாய்க்கைக் நாடு கடத்துவது தொடர்பாக இந்தியாவுக்கு ஏதேனும் அரசியல் உறுதிமொழி அளிக்கப்பட்டதா என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அரசத்தந்திர உறவுகளுக்காக நாட்டின் நாடு கடத்தல் சட்டங்களை மீறக்கூடாது என பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
எனவே, சாகிர் நாய்க்கை நாடு கடத்தும் இந்தியாவின் கோரிக்கை, மலேசிய சட்டத் திட்டங்களைப் பூர்த்திச் செய்யும் அளவுக்கு உள்ளதா என்பதை புத்ராஜெயா விளக்க வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, மோடி-அன்வார் இடையிலான இந்த பேச்சுவார்த்தை குறித்து தாம் கவலைப்படவில்லை என சாகிர் நாய்க் கூறியுள்ளார்.
தமக்குத் தெரிந்தவரை, பிரதமர் அன்வார் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என தனது வழக்கறிஞர் அக்பர்டீன் அப்துல் காடிர் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றுமில்லாத விஷயத்தை இந்தியப் பத்திரிகைகள் தான் பெரிதாக்குவதாக அவர் கூறிக் கொண்டார்.
சாகிர் நாய்க்கை நாடு கடத்தும் விவகாரத்தில், போதிய ஆதாரங்கள் மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என அன்வார் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பணச்சலவை குற்றச்சாட்டுகள் மற்றும் வெறுப்புணர்வு பேச்சுகளுக்காக சாகிர் நாய்க்கை இந்தியா பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடி வருகிறது…



