
கோலாலாம்பூர், ஜூலை-3 – கோலாலாம்பூர், தாமான் டேசாவில் சாலைத் தகராற்றில், ஓர் ஆடவரிடம் போலி கைத்துப்பாக்கி காட்டி மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், இருவர் கைதாகியுள்ளனர்.
நேற்று முந்தினம் இரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 28 வயது காரோட்டி கொடுத்த புகாரின் பேரில், அக்கைது மேற்கொள்ளப்பட்டது.
இரவு 11 மணி சம்பவத்தில் புகார்தாரரின் Honda City கார் இன்னொரு காரால் மோதப்பட்டது.
இதனால் இரு காரோட்டிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, திடீரென Toyota Yaris காரோட்டுநர் கருப்பு நிற கைத்துப்பாக்கியை நீட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து முறையே 19, 27 வயது ஆடவர்கள் விசாரணைக்குக் கைதாகி, 4 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவ்விருவரில் ஒருவருக்குச் சொந்தமான அந்த போலி கைத்துப்பாக்கி, டிக் டோக்கில் வாங்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
போலி சுடும் ஆயுதங்கள் விற்பனையை முறியடிக்க போலீஸ் ஆங்காங்கே அதிரடிச் சோதனைகளை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.