சிங்கப்பூரில் அதிர்ச்சி – ஒரே சமயத்தில் மசூதிகளுக்கு இறைச்சிகளுடன் அனுப்பப்பட்ட மர்மப் பொட்டலங்கள்; அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை

சிங்கப்பூர், செப்டம்பர்-26,
சிங்கப்பூரின் வட சிராங்கூன் வீதியில் உள்ள அல்-இஸ்திகாமா மசூதியில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்குரியப் பொட்டலத்தில், இறைச்சி இருந்ததை அந்நாட்டு உள்துறை அமைச்சர் கே. சண்முகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
பன்றி இறைச்சிப் போல தெரிந்த நிலையில், அதை உறுதிச் செய்ய ஆய்வுகள் தொடர்வதாக அவர் கூறினார்.
சம்பவத்தன்று அந்த பொட்டலத்தில் ஆபத்தான பொருட்கள் எதையும் நிபுணர்கள் கண்டுபிடிக்கவில்லை.
சுவாசக்குறைபாடு ஏற்பட்ட ஒருவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் அங்கு வழக்கமான தொழுகைகள் மீண்டும் தொடங்கின.
இந்நிலையில் மசூதி போன்ற வழிபாட்டு இடங்களை இலக்காகக் கொள்வது முற்றிலும் ஏற்க முடியாதது; நெருப்போடு விளையாடுவதற்கு சமமான இத்தகைய சம்பவங்களுக்கு சிங்கப்பூரில் சமரசம் இல்லை.
எனவே இவ்விவகாரம் கடுமையாகக் கருதப்பட்டு, தீவிர விசாரணைகள் நடைபெறுவதாகவும் சண்முகம் தெரிவித்தார்.
அண்மையில் வேறு சில மசூதிகளிலும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து போலீஸார் பாதுகாப்பை அதிகரித்து, மசூதிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.
இத்தகைய நிகழ்வுகள் மதங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித்த சண்முகம், மக்கள் தங்கள் மத நம்பிக்கைகளை பாதுகாப்பாகவும், பரஸ்பர மரியாதையுடனும் கடைப்பிடிக்க முடியும் சூழலை அனைவரும் உறுதிச் செய்ய வேண்டும் என்றார்.