சிங்கப்பூர் பள்ளிகளில் கடுமையாகும் ஒழுங்குமுறை: அடாவடியில் ஈடுபடும் மாணவர்களுக்குப் பிரம்படித் தண்டனை

சிங்கப்பூர், மே-6-பள்ளிகளில் மாணவர்களுக்கிடையிலான அடாவடி மற்றும் பகடிவதையைத் தடுக்க, சிங்கப்பூர் அரசாங்கம் அதன் ஒழுங்குமுறை விதிகளைக் கடுமையாக்கியுள்ளது.
அவ்வகையில், கடுமையான வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு இனி பிரம்படித் தண்டனை வழங்கப்படலாம்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பின்படி, பள்ளிகளில் அடாவடிச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக ‘பூஜ்ஜியம் சகிப்புத்தன்மை’ கொள்கை கடைப்பிடிக்கப்படும்.
குறிப்பாக, மற்ற மாணவர்களை பகடிவதை செய்தல் அல்லது உடல் ரீதியான வன்முறையில் ஈடுபடும் ஆண் மாணவர்களுக்குப் பிரம்படித் தண்டனை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், இந்தத் தண்டனையானது பள்ளியின் தலைமையாசிரியர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியரால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இது பொதுவாக மாணவர்களின் உள்ளங்கை அல்லது ஆடைகளுக்கு மேல் பின்பக்கத்தில் வழங்கப்படலாம்.
தண்டனையுடன் நிறுத்திக்கொள்ளாமல், தவறு செய்யும் மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்குப் பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அக்குடியரசின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



