சிரம்பான், ஜூலை 31 – நெகிரி செம்பிலான், சிரம்பானிலுள்ள, மழலையர் பராமரிப்பு இல்லம் ஒன்றில், ஈராண்டுகளுக்கு முன், கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, 15 மாதக் குழந்தை உயிரிழந்ததாக, மரண விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நூர் ராணியா அசிபா யுசேரி எனும் அக்குழந்தையின் கழுத்து, தொட்டில் துணியில் சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அக்குழந்தை உயிரிழந்ததை, சாட்சியங்களும், ஆதாரங்களும் காட்டுவதாக மரண விசாரணை நீதிமன்ற நீதிபதி டத்தின் சுரிதா புடின் தெரிவித்தார்.
அக்குழந்தையை கண்காணிப்பு இன்றி, அறை ஒன்றில் அதன் பராமரிப்பாளர் விட்டுச் சென்றுள்ளார்.
அதனால், தொட்டிலில் இருந்து இறங்க முயன்ற போது, அக்குழந்தையின் கழுத்து, துணியில் சிக்கி இருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
அதோடு, அக்குழந்தையின் உடலில் வேறு காயங்களோ, எலும்பு முறிவோ எதும் இல்லை என்பதும் சவப்பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
2022-ஆம் ஆண்டு, பிப்ரவரி 22-ஆம் தேதி, பராமரிப்பாளரால் தூங்க வைக்கப்பட்ட நூர் ராணியா, பின்னர் தொட்டில் துணியில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்க காணப்பட்டார்.
உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
எனினும், தனது குழந்தை இறந்தது தொடர்பான விசாரணை முடிவு மனநிறைவு அளிக்கவில்லை என, அதன் தந்தை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.